தேர்தல் நேரத்தில் பொறுப்பு எதுவும் இல்லாமல் எப்படி செயல்பட முடியும்? - சரத்குமார் ஆதங்கம்

சரத்குமார்

சரத்குமார்

Updated on
2 min read

சென்னை: “பாஜகவில் நான் இணைந்தபோது தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார்கள். சமகவை பாஜகவில் இணைக்காமல், தனிக்கட்சியாகவே இயக்கியிருக்கலாம் என எனது ஆதரவாளர்கள் வருத்தப்படுகின்றனர். நான் அதிருப்தியில் இல்லை, ஆதங்கத்தில் உள்ளேன். தேர்தல் நேரத்தில் பொறுப்பு எதுவும் இல்லாமல் எப்படி செயல்பட முடியும்?.” என சரத்குமார் தெரிவித்தார்.

சென்னையில் இன்று பாஜக நிர்வாகி சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று இங்கே வந்துள்ளவர்கள் அனைவரும் என்னுடன் 30 ஆண்டுகளாக பயணித்தவர்கள். அவர்கள் இன்று என்னிடம் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். அதற்கு ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என பதிலளித்திருந்தேன்.

இதனால் நான் பாஜகவிலிருந்து விலகப்போவதாக பலர் செய்திகளை வெளியிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று என் ஆதரவாளர்களை சந்தித்தேன். அவர்கள் என்னை சந்தித்த போது, எனக்கு (சரத்குமார்) இதுவரை எந்த பொறுப்பும் வழங்கவில்லை என்ற தங்களின் ஆதங்கத்தை தெரிவித்தனர். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.

எனது ஆதரவாளர்களில் 19 மாநில நிர்வாகிகளுக்கு பாஜக சார்பில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டால்தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர்கள் கூறினார். தங்கள் தலைவருக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தனர். ஏன் சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்கக் கூடாது என்றும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

நான் இவற்றை ஒரு வேண்டுகோள் கடிதமாக தேசிய தலைமைக்கும், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் அனுப்ப உள்ளேன். அந்தக் கடிதத்தில், எனக்கு பொறுப்பு வழங்கப்படாதது குறித்த ஆதங்கத்தை குறிப்பிடுவோம். மேலும், பொறுப்பு வழங்கப்படாதது குறித்து எனக்கும் ஆதங்கம் உள்ளது.

17 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்த எனது புகைப்படம் திருச்சி மாநாட்டு மேடையில் இடம்பெறவில்லை என என் ஆதரவாளர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். முக்கியமான பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தால் என் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் என்றும் அவர்கள் கூறினர். தேர்தல் நேரத்தில் பொறுப்பு எதுவும் இல்லாமல் எப்படி செயல்பட முடியும்?.

பாஜகவில் நான் இணைந்தபோது தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார்கள். நான் ஒரு மாநிலத் தலைவராக இருந்தால், ஒருவரின் பலம் அறிந்து அவருக்கு பொறுப்பு வழங்கி கட்சியில் இணைத்திருப்பேன். கட்சியில் சேர வைத்து காக்கவைத்தது தவறு என நினைக்கிறேன்.

தற்போது எனக்கான பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென தலைமையிடம் வேண்டுகோள் வைக்க முடிவு செய்துள்ளேன். அவர்கள் நிச்சயம் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பார்கள் என்று நம்புகிறேன். அதனால் தற்சமயம் சமகவை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை. ஆனாலும் பொறுப்பு இல்லாமல் செயல்பட முடியாது. எனவே பொறுப்புகள் வழங்கப்படுவது அவசியம்.

நான் மோடிஜியின் மீது உள்ள மதிப்பினால்தான் பாஜகவில் இணைந்தேன். 2026 தேர்தலில் நானும், எனது மனைவி ராதிகாவும் போட்டியிட மாட்டோம். தலைமை சொன்னால் கூட நான் போட்டியிட மாட்டேன். என்னோடு பயணித்த திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென ஒரு பட்டியலை வழங்கியுள்ளேன். நான் அரசியல்ரீதியாக திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நான் அதிருப்தியில் இல்லை, ஆதங்கத்தில் உள்ளேன்.

நல்ல தலைவர்களை ஆதரிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். தவெகவை பற்றி எனக்கு மதிப்பீடு ஒன்றுமே கிடையாது, அவர் தலைவனே கிடையாது. சமகவை பாஜகவில் இணைக்காமல், தனிக்கட்சியாகவே இயக்கியிருக்கலாம் என எனது ஆதரவாளர்கள் வருத்தப்படுகின்றனர்.” எனத் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>சரத்குமார்</p></div>
ராமதாஸ் - சசிகலா கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ‘அதிர்ச்சி’... ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in