நீட் எதிர்ப்பு வாகன பேரணிக்கு தி.க. அனுமதி கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

நீட் எதிர்ப்பு வாகன பேரணிக்கு தி.க. அனுமதி கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து இருசக்கர வாகனத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி திராவிடர் கழகம் தாக்கல் செய்துள்ள வழக்கில் தமிழக காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடை எதிர்த்தும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் திட்டமிடப்பட்டது.

இதற்காக கடந்த ஜூலை 18-ம் தேதி டிஜிபி-யிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், உரியக் காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு ஜூலை 27-ம் தேதி கடிதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனைத்து ஆயத்தப் பணிகளும் நிறைவடைந்து, பிரச்சார பயணம் தொடங்க தயாரான நிலையில், ஜூலை 30 அன்று காவல் துறையினரால் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது.

காவல் துறையின் இந்த அனுமதி மறுப்பு உத்தரவை ரத்து செய்து, இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழக காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திராவிடர் கழகத்தின் வழக்கு குறித்து ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை, அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நீட் எதிர்ப்பு வாகன பேரணிக்கு தி.க. அனுமதி கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
வானிலை முன்னறிவிப்பு: சென்னை, தி.மலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in