

ஒகேனக்கல் அருவி. (கோப்பு படம்)
தருமபுரி / மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 14-ம் தேதி காலை 6 மணியளவில் விநாடிக்கு 400 கனஅடியாக பதிவான நீர்வரத்து, 15-ம் தேதி 300 கனஅடியாகவும், 16-ம் தேதி 200 கனஅடியாகவும் சரிந்தது. இந்நிலையில் 17-ம் தேதி காலை விநாடிக்கு 700 கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து, நேற்று காலை 2,000 கனஅடியாக மேலும் அதிகரித்தது. ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்தில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 193 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 539 கனஅடியாக அதிகரித்தது. காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 79.16 அடியிலிருந்து 79.10 அடியாகவும், நீர் இருப்பு 41.12 டிஎம்சியிலிருந்து 41.07 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.