

படம்:எல்.சீனிவாசன்
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘நம்ம சென்னை பிராப்பர்ட்டி ஃபேர்’ என்ற 2 நாள் வீட்டு வசதி கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், ஐ ஆட்ஸ் & ஈவென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘நம்ம சென்னை பிராப்பர்ட்டி ஃபேர்’ என்ற 2 நாள் வீட்டு வசதி கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் வி.சிவா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சியின் பங்குதாரராக காசாகிராண்ட் நிறுவனமும், இணை பங்குதாரர்களாக ஆதித்யாராம் குழுமம், அபி எஸ்டேட் நிறுவனம், ஜிடிபி நிறுவனம் ஆகியவையும் செயல்படுகின்றன.
தொடக்க விழாவில் காசாகிராண்ட் இணை துணைத் தலைவர் கவுதம் பிரபாகரன், ஆதித்யாராம் குழுமத்தின் இணை முதன்மைச் செயல் அதிகாரி சிவகுமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைமை பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகள், பட்ஜெட் வீடுகள், சொகுசு வில்லாக்கள், வரிசை வீடுகள் ஆகியவற்றுக்காக காசாகிராண்ட், ஆதித்யாராம் குழுமம், அபி எஸ்டேட், ஜிடிபி உள்ளிட்ட பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் வழங்க இந்தியன் வங்கி என 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
கண்காட்சி குறித்து காசாகிராண்ட் இணை துணைத் தலைவர் கவுதம் பிரபாகரன் கூறும்போது, “சென்னையில் ஈசிஆர், ஓஎம்ஆர், பல்லாவரம், குரோம்பேட்டை, போரூர், முகப்பேர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட நகரின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் காசாகிராண்டின் வில்லாக்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள் உள்ளன. ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான இத்திட்டங்களில், கட்டுமான இடத்தை நேரில் பார்வையிட வரும் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சலுகைகள் வழங்கப்படும். வெறும் தனி வீடாக இல்லாமல், குடியிருப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பழகும் வகையிலான ஒரு சமூக கட்டமைப்பாக உருவாக்குவதே எங்களது நோக்கம்” என்றார்.
ஆதித்யா ராம் குழுமத்தின் விற்பனைத் துறை தலைவர் ஜெ.ஸ்ரீனிவாசன் கூறும்போது, “32 ஆண்டு கால அனுபவத்தால் ஆதித்யா ராம் குழுமம் மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த முறை ஈசிஆரில் ‘பேலஸ் சிட்டி’ என்ற பெயரில் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான அரண்மனை வடிவமைப்பிலான வில்லாக்கள், கேளம்பாக்கம் அருகே 53 ஏக்கர் பரப்பளவில் 490 வீட்டுமனைகளை கொண்ட ‘டவுன்ஷிப்’ திட்டம், ஓஎம்ஆரில் 20 ஏக்கர் பரப்பளவில் ‘ஹேப்பினெஸ்ட்’ திட்டம், படப்பையில் ‘ரோமன் தீம்’ கிரவுன் திட்டம் என பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். கண்காட்சியில் நேரில் வீட்டுமனைகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்யேக சலுகையாக மின்சார இருசக்கர வாகனங்களும் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
ஜிடிபி நிறுவனத்தின் விற்பனை பிரிவு மேலாளர் நிகிதா கூறும்போது, “தொழில்துறை கட்டுமானம், மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக குடியிருப்புகள், ஆடம்பர மற்றும் மலிவு விலை குடியிருப்புகள் என பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக ‘ரைசிங் பாம்’ என்ற துபாய் பாணியிலான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் கொண்ட புதிய திட்டத்தையும், ஈசிஆரில் செயற்கை கடற்கரையுடன் கூடிய ஆடம்பர குடியிருப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். கண்காட்சியில் முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்படும்” என்றார்.
இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் அகில்பந்துகோஷ் கூறும்போது, “இந்தியன் வங்கி சந்தையிலேயே மிக குறைந்த வட்டி விகிதமான 7.35 சதவீதத்தில் வீட்டு கடன்களை வழங்குகிறது. பண்டிகை கால சலுகையாக வீட்டு கடன்களுக்கு எவ்வித செயலாக்க கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. வீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் பரிசீலனை எளிதாக்கப்பட்டு, அதிகபட்சமாக 3 முதல் 4 வேலை நாட்களுக்குள் கடன் ஒப்புதல் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.