

சென்னை: எமர்ஜென்சி காலத்தில் நடவடிக்கை எடுத்தது போல காவல்துறை செயல்படுவதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
காவல்துறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கம்யூனிஸ்ட் கூட்டணி பாசத்தால் தவெக அரசு பாசிசத்தை கடைபிடிக்கிறது.
இந்துமத துவேஷ நிகழ்ச்சியை தடை செய்ய புகார் கொடுத்தால் தடுப்பு காவலில் முடக்குகிறது. தஞ்சாவூரில் இந்து மதத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தும் வகையில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியை தடை செய்ய கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததற்காக இந்து முன்னணி திருச்சி கோட்ட செயலாளர் குணசேகரனை காவல்துறை அதிகாலை 3 மணிக்கு கைது செய்து மறுநாள் இரவு 10.30 மணி வரை சட்டவிரோத தடுப்பு காவலில் வைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, உணவு குடிநீர் கூட கொடுக்காமல் மிருகத்தனமான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது காவல் துறை.
அரசியலமைப்பு சட்டம் உறுதியளித்துள்ள வழிபாட்டு உரிமை மற்றும் மத கண்ணியம் காக்க புகார் கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை எமர்ஜென்சி காலத்தைப் போன்று புகார் கொடுத்த இந்து முன்னணி பொறுப்பாளரையே கைது செய்து சட்ட விரோத காவலில் அடைத்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.