

சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு முன்பு சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க, அனைத்து கோட்ட பொறியாளர்களுக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ், மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் என 70 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் உள்ளன. இதில், மாவட்ட இதர சாலைகள் மட்டுமே 45 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு உள்ளன.
இச்சாலைகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் தமிழகம் முழுவதும் 68 இடங்களில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக, ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.
இதற்கிடையில் ஒப்பந்ததாரர்களுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
‘‘தற்போது மாநிலம் முழுவதும் 500 சாலைகளில் பணிகள் நடைபெறுகின்றன. இதில், 200 சாலைத் திட்டப் பணிகள் 70% நிறைவடைந்துள்ளன. எஞ்சிய சாலைப் பணிகள் 50% முடிந்துள்ளன. அனைத்து பணிகளும் விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பணிகளை கண்காணிக்க தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.