

சென்னை: வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நிலை ஆணை அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என உயர் அழுத்த மின் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தால் மின்சாரத் தேவை அதிகரித்து மின்வெட்டுப் பிரச்சினை நிலவி வரும் சூழலில் மின் வாரியத்தின் சில முடிவுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள் மற்றும் உயர் அழுத்த நுகர்வோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மாநிலம் முழுவதும் ஒரு மெகாவாட்க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் 10 ஆயிரம் உயர் அழுத்த மின்நுகர்வோர் உள்ளனர். இவர்களுக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்சார கொள்முதலுக்கு நிலை ஆணை அனுமதி அளித்து வந்த எஸ்.எல்.டி.சி எனப்படும் ‘மாநில மின் சுமை நுகர்வு மையம்’ கடந்த ஜூன் மாதம் முதல் அதற்கான அனுமதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் இந்திய எரிசக்தி பரிமாற்றம் மூலம் வெளிச்சந்தைகளில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடியாமல் உயர் அழுத்த மின் நுகர்வோர் திணறி வருகின்றனர். இந்த அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் முதல் வழங்கப்படவில்லை. மேலும், முடிவடைந்த 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்களும் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்படாமல் காத்திருக்கின்றன.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான விண்ணப்பங்களைப் பெற புதிய இணையதளத்தை உருவாக்கி வருகிறோம். அடுத்த மாதம் அவை செயல்பாட்டுக்கு வந்தவுடன் புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும்” என்றார். உயர் அழுத்த மின்நுகர்வோருக்கு அனுமதி வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.