

திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில், திருச்சி குடமுருட்டி பறவைகள் பூங்கா அருகே நேற்று ஆய்வு செய்த உயர் அதிகாரிகள் குழுவினர்.
திருச்சி: அதிக சாலை விபத்துகள் நிகழும் திருச்சி குடமுருட்டி முதல் பேட்டைவாய்த்தலை வரையுள்ள நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, அரசு உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருச்சி குடமுருட்டி முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான 25 கி.மீ. தொலைவுள்ள திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், குடமுருட்டி முதல் அந்த நல்லூர் வரை 12 கி.மீ தொலைவிலான பகுதி மாநில நெடுஞ்சாலையாகவும், அதன்பின்னர் உள்ள பகுதி தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது.
இதில் மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக நேரிடும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதால், இச்சாலையை சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி, விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரி கே.தங்கராஜ், சாலைப் பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் உள்ளிட்ட சமூக செயல்பாட்டா ளர்கள் திருச்சி எம்.பி.துரை வைகோவிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர். அவர் அந்த மனுவை ஆட்சியருக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதையடுத்து, ஆட்சியர், திருச்சி தெற்கு பகுதி ஊராட்சி மற்றும் தணிக்கை துறை உதவி இயக்குநர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, 3 நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
ஆட்சியரின் உத்தரவின்படி, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தமிழ் மணி, ஜீயபுரம் டிஎஸ்பி சங்கர், மாநில நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் பிரியதர்ஷினி உள்ளிட்ட குழுவினர் குடமுருட்டி முதல் பேட்டைவாய்த்தலை வரை கரூர் நெடுஞ்சாலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த குழுவினர், இந்த சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு ஏதுவாகவும், விபத்துகளை குறைக்கும் விதமாகவும் பல்வேறு பரிந்துரைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தயாரித்து ஆட்சியரிடம் அளிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முறையாக பரிசீலித்து, ஆட்சியர் கரூர் சாலையில் நிகழும் விபத்துகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.