

சென்னை: கைதிகள் தப்பிய விவகாரத்தை அடுத்து, சிறைகளில் பாதுகாப்பை ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் சமீபத்தில் தப்பிச் சென்ற சம்பவத்தை தொடர்ந்து, தமிழக சிறைகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்தேன்.
இந்த ஆய்வின்போது பெறப்பட்ட கருத்துகள், விவரங்களின் அடிப்படையில், கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும், நாட்டின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.
முன்னாள் சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜே.கே திரிபாதி (ஓய்வு) இதன் தலைவராகவும், தற்போதைய சிறைகள், சீர்திருத்தப் பணிகள் துறையின் இயக்குநரான கூடுதல் டிஜிபி கே.சங்கர் மற்றும் சிறைத் துறை முன்னாள் துணைத் தலைவர் (டிஐஜி) எஸ்.ராஜேந்திரன் (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தி, தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு, சிறையின் பாதுகாப்புக்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், தொழில்நுட்ப இடைவெளிகள், பணிச்சுமைக்கு ஏற்ப போதுமான அளவில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இக்குழு ஆய்வு செய்யும்.
வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகள் அடங்கிய பரிந்துரை அறிக்கையை இக்குழு அரசுக்கு சமர்ப்பிக்கும்.
போர்க்கால அடிப்படையில் சிறைகளின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். பணியில் கவனக்குறைவாக செயல்படும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.