

மதுரை: கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் அதே ஊரில் வசிப்பவராக இருக்க வேண்டியதில்லை. அந்த தாலுகாவை சேர்ந்தவராக இருந்தால் போதும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நத்தம் வட்டாட்சியர் 9.5.2022-ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யவும், சுப்புராஜ் என்பவருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்யக் கோரி வெள்ளையப்பன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவை நீதிபதி மும்மினியேனி சுதீர்குமார் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கிராம உதவியாளர் பணி நியமன செயல்முறையில் பங்கேற்றுள்ளார். அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து தேர்வு அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். பணி நியமன அறிவிப்பு அடிப்படையில் பணி நியமன செயல்முறையில் பங்கேற்ற பிறகு அந்த அறிவிப்பை மற்றும் நிபந்தனைகளை எதிர்த்து வழக்கு தொடர முடியாது.
செல்லப்பநாயக்கன்பட்டி கிராம உதவியாளராக தேர்வு செய்யப்பட்ட நபர், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அல்ல. கிராம உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவர் அதே கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதனால் அவர் கிராம உதவியாளர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்றும், குறிப்பிட்ட கிராமத்தில் தகுதியான விண்ணப்பதாரர் யாரும் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களை நியமிக்கலாம் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய்த்துறை 17.06.1998-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் கிராம உதவியாளர் பணியிடத்தில் நியமிக்கப்படுபவர் தான் நியமிக்கப்படும் கிராமத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது அக்கிராமத்தில் தகுதியான விண்ணப்பதாரர் யாரும் இல்லாத பட்சத்தில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதே வருவாய்த்துறை 19.10.2015ல் பிறப்பித்த அரசாணையில், கிராம உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்படுபவர் அதே வட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதாகும். முந்தைய அரசாணையில் கூறப்பட்டுள்ள ஒரே கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை திருத்தப்பட்டு இரண்டாவது அரசாணையில் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கிராம உதவியாளராக தேர்வு செய்யப்படவில்லை என்ற மனுதாரரின் வாதம் ஏற்க முடியாது.
மனுதாரர் மாற்றுத் திறனாளி என்றும், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பது மற்றொரு வாதம். இதை ஏற்க முடியாது. நிரப்பப்பட்ட பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரியது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளவர் அதே பிரிவை சேர்ந்தவர் தான். எனவே செல்லப்பநாயக்கன்பட்டி கிராமத்தின் கிராம உதவியாளராக 3-வது எதிர்மனுதாரர் நியமிக்கப்பட்டதில் தலையிட எந்தக் காரணமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.