

சென்னை: ஜெம் வீரமணி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ‘சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து 4 நாட்கள் தான் ஆகிறது. இந்த வழக்கில் விளம்பரம் தேட வேண்டாம். சிபிஐ போலீஸார் என்ன ஆப்பிரிக்காவில் இருந்தா வரப்போகிறார்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
மேலும், மனுதாரரான வாராகி வியாழக்கிழமை மதியம் 3 மணிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு முன்பாக ஆஜராகி தன்னிடம் உள்ள ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஜெம் கிரானைட் வீரமணி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் தலையீட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமியை போலீஸார் அடையாளம் காணவில்லை. விசாரணையிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
புகாரில் வீரமணி, சாந்தியின் பெயர்கள் இருந்தும் போலீஸார் சரிவர விசாரிக்கவில்லை. மேலும், இந்த வழக்கை இழுத்து மூடவதற்கு ரூ.40 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு குறித்தும், போலீஸ் உயர் அதிகாரிகளின் பங்கு குறித்தும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பு மூலம் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியதுள்ளதால், போக்சோ வழக்கு குறித்தும், வழக்கை இழுத்து மூடியது குறித்தும், பணம் கைமாறியது குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘இந்த வழக்கில் காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, ‘குழந்தைகள் தொடர்புடைய வழக்கில் விளம்பரம் தேட வேண்டாம். சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து 4 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் என்ன செய்து விட முடியும்? தமிழக போலீஸார் மீது நம்பிக்கை இல்லையா? சிபிஐ விசாரணைக்கு மட்டும் அதிகாரிகள் ஆப்பிரிக்காவில் இருந்தா வரப்போகிறார்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜாரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘இந்த வழக்கு தொடர்பாக தகவல்கள், ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அதிகாரியிடம் வழங்கலாம்’ என தெரிவித்தார். மேலும், ‘இந்த வழக்கின் நிலை குறித்து நாளை சிறப்பு புலனாய்வுக் குழு செய்தி அறிக்கை வெளியிடவுள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த ஐபிஎஸ் அதிகாரி கீதாஞ்சலி தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதால், அவருக்குப் பதிலாக வேறு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, ‘மனுதாரர் வராகி தன்னிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆதாரங்களை, நாளை பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகி வழங்க வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 7-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.