

சென்னை: தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் கூட ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அனுமதிக்கும்போது அமைதிப்பூங்காவான தமிழகத்தில் அனுமதி மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன தினத்தை முன்னிட்டு அக்.18 அல்லது அக்.25 அல்லது நவ.1 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக்கூறி ஆர்எஸ்எஸ் மாநிலச் செயலாளர் ஜெகதீசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா மற்றும் வழக்கறிஞர் ரபு மனோகர் ஆகியோர், ‘‘ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சினை வந்துவிடுகிறது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டுமென ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது’’ என்றனர்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘ஊர்வலம், போராட்டம் போன்றவற்றுக்கு அனுமதி கோரி 21 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால், அக்.3-ம் தேதிதான் மனுதாரர் விண்ணப்பித்துள்ளார். ஊர்வலத்துக்கு அனுமதி கேட்கும் வழித்தடங்கள் அனுமதிக்க முடியாத பகுதிகளாக உள்ளன. தீபாவளி பண்டிகை காலத்தில் இதுபோன்ற ஊர்வலங்களுக்கு அனுமதியளித்தால் அது பொதுமக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், போலீஸார் அனுமதி மறுப்பது ஏன்? எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆர்எஸ்எஸ் என்றாலே அனுமதி மறுத்து விடுகின்றனர்.
அரசியல் கட்சிகளின் போராட்டத்துக்கு அனுமதி மறுக்க, மறுக்க அது ஆளுங்கட்சிக்கு எதிராக மாறிவிடும். தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் கூட ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கும்போது அமைதிப்பூங்கா என கூறப்படும் தமிழகத்தில் மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது.
இதன்மூலம் தேவை யற்ற விளம்பரத்தை அரசே ஏற்படுத்தி வருகிறது’’ என்றார், மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (அக்.15) தள்ளிவைத்துள்ளார்.
அரிசி ஆலைக்கு எதிராக போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் உயர் நீதிமன்றத்தில், ‘‘உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தங்களது கிராமத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.
எனவே அந்த ஆலைக்கு எதிராக மயானத்தில் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர்’’ என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ‘‘ஆலையால் ஏற்படும் மாசுவைத் தடுக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராமத்தினர் மயானத்தில் நின்று போராட்டம் நடத்த அனுமதி கோரினால் அதில் போலீஸாருக்கு என்ன பிரச்சினை? அங்கு அடக்கம் செய்தவர்கள் எழுந்து நின்று இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனரா? அரசியல் கட்சியினரும் அனுமதி கோரி நீதிமன்றத்தைத்தான் நாடுகின்றனர்.
போராட்டம் நடத்த எங்கும் அனுமதியளிக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தின் முன்பாக அனுமதியளிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்’’ எனக்கூறி விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளார்.