

சென்னை: அலைகளில் சிக்கி கடலில் மூழ்குபவர்களை உடனடியாக மீட்கும் வகையில் ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மாதவரம் கே.கோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில், ‘எனது 17 வயது மகன் சந்தோஷ் அவனது நண்பர்கள் இருவருடன் கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் குளித்துள்ளான். 3 பேரும் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அருகில் இருந்த மீனவர்கள் 2 பேரை உயிருடன் மீட்டனர்.
ஆனால் எனது மகனின் நிலை என்னவென்று இதுவரையிலும் தெரியவில்லை. எனவே எனது மகனை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பி. கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘மெரினா கடற்கரை, காசிமேடு, பழவேற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை உள்ளிட்ட பிற மாவட்ட கடல் பரப்புகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்பவர்கள், குளிப்பவர்கள், நீந்துபவர்கள் என யாரேனும் திடீரென அலைகளில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டால் அவர்களை உடனடியாக மீட்கும் வகையில் ஏன் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தக் கூடாது?
இதுபோன்ற இக்கட்டான சூழலில் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற இந்திய கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநரின் கீழ் இயங்கும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கும், மாநில அரசு அமைப்புகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். குறிப்பாக கடல் அலைகளால் கடலுக்குள் அடித்துச் செல்லப்படுபவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
எனவே இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை தாமாக முன்வந்து வழக்கில் ஒரு தரப்பினராக சேர்க்கிறோம். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெரனல் அடுத்த விசாரணையின்போது இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்’ என்றனர்.
மேலும், ‘கடல் சீற்றம் அல்லது உயர் அலைகளில் சிக்கிக்கொள்ளும் மீனவர்கள் உள்ளிட்ட பிற நபர்களின் உயிரைக் காக்க மத்திய, மாநில அமைப்புகள் உடனடியாக செயல்படக்கூடிய ஒரு பயனுள்ள நவீன தொழில்நுட்ப முறைகளை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.20-க்கு தள்ளி வைத்துள்ளனர்.