பெரியார் அறிவுலக முறைகேடு: உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல்

ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கூட்டறிக்கை
பெரியார் அறிவுலக முறைகேடு: உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல்
Updated on: 
1 min read

கோவை: பெரியார் அறிவுலகத்துக்கான நூல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேட்டை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், தேசவிரோதச் செயலாக கருதி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், ஆய்வாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் வீ.அரசு, முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் லெ.ஜவகர் நேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைத் தன்மையும், அறிவுப் பெறுமதியும் இல்லாத போலியான பல நூல்கள் இடம் பெற்றிருப்பதற்கு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் எங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் இந்த கூட்டறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறோம்.

கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒருபகுதி போலியானவை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போலியான ஆயிரக்கணக்கான நூல்கள் வாங்கப்பட்டதன் முலம் பதிப்புத் துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கி வரும் பதிப்பகங்களும் அவற்றின் ஊழியர்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியில், மாநிலத்தின் வேறுபல நூலகங்களிலும் போலி நூல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், ஆங்கில நூல்களின் உண்மைத்தன்மையும் சந்தேகத்துக்குரியவையே என்றும் தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில், அறிவுச் சேகரமான நூலகங்களைப் பாதுகாக்கவும், நூலகங்களுக்குள் அதற்கிசைவான நூல்கள் மட்டுமே இருப்பதை உறுதிசெய்வதற்கு பொது நூலக இயக்ககமும் தமிழக அரசும் முன்வரவேண்டும். நூலகத்துறையில் நடைபெற்றுள்ள இந்த முறைக்கேட்டை வழக்கமான நிதிசார் கையாடல் என்பதாக குறுக்கிவிடாமல் தமிழ்ச்சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டை முடக்கும் தேசவிரோதச் செயலாக கருதி தண்டிக்க வேண்டும்.

இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்க வேண்டும். போலி நூல்களை கோவை பெரியார் அறிவுலகத்துக்குப் பரிந்துரை செய்வதவர்கள், தேர்வு செய்வதர்கள், தொகை விடுத்தவர்கள் பற்றிய விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதுடன் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலி நூல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு நூலகங்களில் இருந்து அகற்றுவதுடன் அவற்றை மேற்கொண்டு எங்கும் விற்றுவிடாத வகையில் பறிமுதல் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து நூலகங்களையும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் ஆய்வு செய்து அறிக்கை தரும் வகையில் நடுநிலையான வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

நூலகத் துறைக்குள் வருங்காலத்தில் எவ்வகையான முறைகேடும் நடைபெறாவண்ணம் தடுப்பதற்குத் தேவையான திருத்தங்களுடன் ‘வெளிப்படைத்தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024’ வலுப்படுத்தப்பட வேண்டும்’ என்றும் அந்தக் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலக முறைகேடு: உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல்
“பெரியார் அறிவுலகம் முறைகேடு விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்” - பழனிசாமி

X