

சென்னை: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் தாக்கல் செய்த தனிநபர் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஆத்திகர்களை நாத்திகர்கள் அவமதிப்பது தொடர்ந்தால், மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்படும் என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடந்த 1956-ஆம் ஆண்டு பேசியதாகக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ‘அண்ணாமலை தரப்பில், சனாதனத்துக்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், முத்துராமலிங்கத் தேவர் பேசியதை அண்ணாமலை சுட்டிக்காட்டிப் பேசினார். தனிநபர் புகார் மீது எந்தவொரு ஆரம்பக்கட்ட விசாரணையும் நடத்தாமல், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது தவறு’ என வாதிடப்பட்டது.
சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் தரப்பில், ‘வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அண்ணாமலைக்கு எதிராக வழக்கை சேலம் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது சரிதான்.
அண்ணாமலை தொடர்ந்து இதுபோன்று பேசி வருவதால், அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கூடாது’ என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அண்ணாமலைக்கு எதிராக பியூஸ் மனுஷ் தாக்கல் செய்த தனிநபர் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.