மடப்புரம் அஜித்குமார் வழக்கில் கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மடப்புரம் அஜித்குமார் வழக்கில் கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்வது தொடர்பான நடவடிக்கையை மார்ச் 12 வரை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி விசாரித்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிடுகையில், அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில் தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சிபிஐ விசாரணை நடத்தி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் டிஎஸ்பி, மனுதாரர் உட்பட 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. அந்த சம்மன் அடிப்படையில் மனுதாரர் பிப்.25-ல் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஜாமீன் பத்திரங்களையும் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட மனுதாரர் உட்பட 4 பேரை விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என நீதித்துறை நடுவர் கூறியுள்ளார். இதனால் மனுதாரர் கைது செய்யப்படலாம் என அச்சப்படுகிறார். அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

சிபிஐ தரப்பில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, முன்ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ தரப்பில் மார்ச் 12-ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்த விவகாரத்தை தலைமை குற்றவியல் நடுவர் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

டிஎஸ்பி ஆஜர்:

இதனிடையே, மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அஜித்குமார் வழக்கு விசாரணை நீதித்துறை நடுவர் செல்வபாண்டி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர், விசாரணை மார்ச் 16-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

மடப்புரம் அஜித்குமார் வழக்கில் கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பிரபலங்கள் சங்கமித்த அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் திருமண நிகழ்வு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in