

சென்னை: 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்யப்படும். மேலும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்கும். அதில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடந்துவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழு நேரலை செய்யப்படும். சட்டப்பேரவையில் முன்னர் கடைப்பிடித்து வந்த நடவடிக்கைகள்தான் தற்போதும் தொடரும். வாக்களித்த மற்றும் வாக்களிக்காத பெருமக்களும் வியந்து போற்றி பாராட்டுகின்ற அளவுக்கு இந்த நிதிநிலை இருக்கும் என்று நம்புகிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முழு விவாதத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை சொல்ல அனைத்து உரிமையும் இருக்கிறது; அதேபோல மாற்றுக் கருத்துக்கள் சொல்லப்படும் போது அமைதியாக இருந்து அதைக் கேட்டு விவாதித்து, பின்னர் பதில் சொல்ல வேண்டும். இந்த முறையும் சட்டப்பேரவை அமைதியாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பு எங்களுக்கு வந்துள்ளது. பேரவைத் தலைவரை கேட்டுவிட்டுதான், சட்டப்பேரவை உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. சட்டப்பேரவைக்குள் வைத்து கைது செய்யவே சபாநாயகர் அனுமதி தேவை.
பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி எவரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது: வெளியே நடைபெறும் சம்பவங்களில் கைது செய்ய பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை. 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நான் முறையாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மார்க்கண்டேயன் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.
“சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் பேரவைக்குள் சைகைகள் காட்டுவது விதிகளுக்கு முரணானது என கூறப்படுகிறது” என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “முதல்வர் விஜய் அன்று பேரவையில் சைகை காட்டியதில் எந்த தவறும் இல்லை; விதிக்கு உட்பட்டுதான் அது நடந்தது” என்றார். .
அப்படியென்றால் எதிர்க்கட்சிகள் அனுமதி கேட்டாலும் அளிப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “என்ன சைகை செய்யப்போகிறார் என எனக்கு தெரிந்தால், அனுமதி அளிப்பதா, வேண்டாமா என முடிவெடுப்பேன். முதல்வர் விஜய் என்ன சைகை அளிக்கப்போகிறார் என்பதை புரிந்து கொண்டு நான் அனுமதி அளித்தேன்” இவ்வாறு அவர் பதிலளித்தார்
தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பல இதில் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வருமா என்று பெண்கள் ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், இந்த முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்தளவுக்குப் பூர்த்தி செய்யும் என்பது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே தெளிவாகும்.