மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ் சர்ச்சை: இணை ஆணையர் விளக்கம் அளிக்க ஐகோர் உத்தரவு

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ் சர்ச்சை: இணை ஆணையர் விளக்கம் அளிக்க ஐகோர் உத்தரவு
Updated on
2 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழை கோயில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களின் பெயர் இல்லாமல் அச்சிட்டது யார் என்பது தொடர்பாக கோயில் இணை ஆணையர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளார். நான் உட்பட பலர் உறுப்பினராக உள்ளோம். எங்களின் பதவிக் காலம் 2028 ஜனவரி வரை உள்ளது. அறங்காவலர்கள் குழு கோயில் நிர்வாகத்துக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது.

மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.17-ல் குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு விழா செப். 6-ல் தொடங்குகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவில் கோயில் அறங்காவலர்கள் குழுவின் பங்கு முக்கியமானது. குடமுழுக்கு விழா அழைப்பிதழ் வடிவமைப்பு செய்தபோது அதில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இருந்தன.

தற்போது கோயில் நிர்வாகத்தால் விநியோகம் செய்யப்பட்டு வரும் குடமுழுக்கு அழைப்பிதழில் பதவியில் உள்ள அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளன. அதற்குப் பதிலாக கோயில் நிர்வாகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மரபுப்படி இடம்பெற வேண்டிய திருக்கயிலாய பரம்பரையைச் சேர்ந்த ஆதீனங்களின் பெயர்கள் உள்பட சிலர் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.

மீனாட்சி அம்மன் கோயிலின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்களில், கோயில் நிர்வாகத்தின் பிரதிநிதித்துவத்தின் ஒரு பகுதியாக அந்தந்தக் காலகட்டங்களில் பதவியில் இருக்கும் அறங்காவலர்களின் பெயர்கள் இடம்பெறுவது வழக்கமான நடைமுறை. கடந்த 2009-ல் நடைபெற்ற குடமுழுக்கு அழைப்பிதழ், கடந்தாண்டு நடைபெற்ற மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான திருவாப்புடையார் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ், ஆவணி மூலத் திருவிழா, சித்திரைத் திருவிழா அழைப்பிதழ்களிலும் அறங்காவலர்கள் பெயர்கள் அச்சிடப்பட்டன.

அழைப்பிதழில் அறங்காவலர்களின் பெயர்கள் இடம்பெறாதது குறித்து கேட்டதற்கு நிர்வாக அதிகாரி உரிய விளக்கம் அளிக்கவில்லை. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழியாக தமிழக முதல்வருக்கு 21.8.2026-ல் மனு அனுப்பினேன். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் அதிகார வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவும், அறங்காவலர்களின் சட்டப்பூர்வக் கடமைகள், பணிகளில் கோயில் அதிகாரிகள் தலையிடவோ, இடையூறு செய்யவோ, தடுக்கவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ கூடாது என்றும், அறங்காவலர்களின் செயல்பாட்டுக்கு அனைத்து ஒத்துழைப்பு வழங்கவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சரவணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழை கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர் இல்லாமல் அச்சிட்ட அதிகாரி யார்? அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரி யார்? இது தொடர்பான விவரங்களை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ் சர்ச்சை: இணை ஆணையர் விளக்கம் அளிக்க ஐகோர் உத்தரவு
“சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா?” - கனிமொழி எம்.பி. கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in