மதுரை: தமிழகத்தில் பணியில் உள்ள காவல் துறையினர் மீதான குற்ற வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்ய டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனியைச் சேர்ந்த எம். சௌந்தரபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றேன். இருப்பினும் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் தன் மீது பதியப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி எனக்கு பணி வழங்க தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மறுத்தார்.
அந்த வழக்கில் என்னை நீதிமன்றம் ஏற்கெனவே விடுவித்துள்ளது. எனக்குப் பணி வழங்க மறுத்து எஸ்பி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எனக்குப் பணி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசுத் தரப்பில், தமிழ்நாடு சிறப்பு காவல் துணைப் பணி விதிகளின்படி காவல் நிலைய சரிபார்ப்பின் போது வழக்கு நிலுவையில் இருந்ததால் பணியில் சேர்க்க முடியாது. இவர் அடுத்த தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும் என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காவல் துறையில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் நுழைவதைத் தடுக்க கடுமையான விதிகள் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதே கட்டுப்பாடு, பணியில் இருக்கும் காவலர்களிடம் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறியே?
குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புச் சோதனையில் பிடிபடும் அதிகாரிகள் மீது ஆண்டுகள் பல ஆகியும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், தொடர்ந்து சேவையில் நீடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போதே துறை ரீதியான விசாரணையை நடத்த வேண்டும் என 1973-ம் ஆண்டின் அரசாணையே வலியுறுத்துகிறது. இருப்பினும் இது முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
தமிழக காவல் துறையில் வழக்கு நிலுவையில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அந்த வழக்குகள் எவ்வளவு காலமாக நிலுவையில் உள்ளன? குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய விவரங்கள் என்ன? என்பது குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை செப்.28-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.