

சென்னை: தமிழக டிஜிபியாகப் பதவி வகித்த ரவீந்திரன் கடந்த 2021-ம் ஆண்டு இறந்தார். அவரது மனைவி ராணி புஷ்பலதா ரவீந்திரன் கடந்தாண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் ராணி புஷ்பலதா தனது சொத்துக்களைத் திலிப்குமார் என்பவருக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அந்த உயிலை செயல்படுத்த வழக்கறிஞராக தன்னை நியமித்துள்ளதாகவும் கூறி பரமசிவம் என்பவர், அந்த உயிலுக்கு சான்றளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, உயிலில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பரமசிவம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் என். சதீஷ்குமார், ஜி.கே.முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வி்ல் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சொத்துக்கான சட்டப்பூர்வ வாரிசு யாரும் தற்போது ஊரில் இல்லாத நேரத்தில் முன்னாள் டிஜிபியின் மனைவிக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடந்திருப்பதற்கு முகாந்திரம் உள்ளது. எனவே, இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். அந்த அறிக்கையைத் தமிழக டிஜிபி டிச.14 அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.