திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
Updated on
1 min read

சென்னை: முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கைதான விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஜூலை 20-ம் தேதி கைது செய்தனர். அதையடுத்து நீதிமன்ற காவலில் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் இயந்திரத்தனமாக பதியப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் பிறப்பிக்காமல் நள்ளிரவில் வழக்கு பதிவு செய்து அதிகாலையில் ஒரு மக்கள் பிரதிநிதியை கைது செய்துள்ளனர்.

கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மனுதாரர் எந்த கருத்தும் கூறவில்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘‘மனுதாரர் முதல் வருக்கு மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

கைது செய்வதற்கு முன்பாக இருமுறை அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக.5-ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால் இனி யாரும் இதுபோல பேசக்கூடாது என உத்தரவாதம் அளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மார்க்கண்டேயனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இனி இதுபோல் பேசமாட்டேன் என தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடக்கும் நாள்கள் தவிர்த்து மற்ற நாட்களில் இரு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
தமிழக முதல்வரை கொச்சையாக விமர்சனம் செய்வதா? - உதயநிதிக்கு தமிழிசை கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in