

சென்னை: முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வா் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயனை, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் ஜூலை 20ம் தேதி கைது செய்தனர்.
தன்னை சிறையிலடைத்து தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், ஜாமீன் கோரி மார்கண்டேயன் தாக்கல் செய்திருந்த மனுவை, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, ஜாமீன் கோரி மார்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இதுபோல பேசியிருக்க கூடாது எனக் கூறி தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்
காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்க உள்ளதால், இனிமேல் இதுபோல் பேசப் போவதில்லை என உத்தரவாதம் அளிக்க உத்தரவிடலாம் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, இதுபோல் இனிமேல் பேசப்போவதில்லை என தூத்துக்குடி நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.