மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

ராமதாஸ் மற்றும் அன்புமணி
ராமதாஸ் மற்றும் அன்புமணி
Updated on
1 min read

சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கிக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உட்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கு முடிவுக்கு வரும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அன்புமணி மற்றும் வடிவேல் ராவணன் தரப்பில், ‘ஏற்கெனவே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல; இதை தள்ளுபடி செய்ய வேண்டும்; ஏற்கெனவே ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு அதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், புதுச்சேரியில் தேர்தலும் முடிந்துவிட்டது; அதனால் சின்னத்தை முடக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.

2025 ஜூலையில் மாம்பழம் சின்னத்தை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர்தான், அன்புமணியை தலைவராக ஏற்கக்கூடாது என்று ராமதாஸ் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. தந்தை எதிராக நான் செயல்படவில்லை; தலைவர் யார் என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவுசெய்ய முடியும்; ராமதாஸ் எந்த பொதுக் குழுவும் நடத்தாமல் தன்னைத் தானே தலைவராக பிரகடனப்படுத்தி உள்ளார். கட்சி மீது அக்கறை இருந்தால் சின்னத்தை முடக்கக் கேட்டு அவர் வழக்கு தொடருவாரா?’ என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில், ‘விதிகளின்படி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சி அங்கீகாரம் இழந்த பிறகு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சின்னம் சலுகை அடிப்படையில் ஒதுக்கப்படும். தேர்தல் ஆணைய ஆவணங்ககள் அடிப்படையில் பாமகவை அன்புமணி பிரகடனப்படுத்துவதால் சின்னத்தை கட்சிக்கு ஒதுக்கி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஏற்கெனவே தேதிகள் நடைமுறைகள் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பிரச்சாரமும் வாக்குப் பதிவு மட்டுமே மீதமுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

ராமதாஸ் தரப்பில், ‘கட்சியின் நிர்வாகக் குழு கூடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு பரிசீலிக்கப்படாததால் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, மாம்பழம் சின்னத்தை முடக்கிவைக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ராமதாஸ் மற்றும் அன்புமணி
காரைக்குடி பிரச்சாரத்தில் பேசாமல் புறப்பட்டார் விஜய்: தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in