காரைக்குடி பிரச்சாரத்தில் பேசாமல் புறப்பட்டார் விஜய்: தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு

காரைக்குடி பிரச்சாரத்தில் பேசாமல் புறப்பட்டார் விஜய்: தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு
Updated on
1 min read

காரைக்குடி: காரைக்குடி தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்ததால், தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பிச் சென்றார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காவல் துறை அனுமதியும் அளித்திருந்தது. காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக விஜய் இன்று வாக்கு சேகரிப்பதாக இருந்தது. இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை வந்த விஜய், அங்கிருந்து தனது வாகனம் மூலமாக காரைக்குடிக்கு புறப்பட்டார்.

மதுரையிலிருந்து வரும் வழியில் தவெகவினர் திரண்டதால், அவர்களுக்கு கையசைத்தபடி விஜய்யின் வாகனம் ஆமை வேகத்தில் பயணித்தது. இடையில் திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய், அவருக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் ஏறி பயணிக்க தொடங்கினார். இதனால் அவர் காரைக்குடிக்கு வருவதற்கு மிகவும் தாமதமானது.

மதுரையில் இருந்து காரைக்குடி வருவதற்க்கு உள்ள 90 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க விஜய்யின் வாகனம் 4 மணி நேரத்தும் மேல் எடுத்துக்கொண்டது. இதனால் விஜய், காரைக்குடிக்கு மதியம் 2.30 மணிக்கு மேல்தான் வந்தார். விஜய் காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய நண்பகல் 12 மணி முதல் மதியம் 2.30 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

காவல் துறை அனுமதித்திருந்த நேரத்தை தாண்டி காரைக்குடிக்கு விஜய் வந்ததால், அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பிரச்சாரம் நடக்கும் இடத்தில் கூடியிருந்த தொண்டர்களிடம் பேசாமலேயே விஜய் அங்கிருந்து புறப்பட்டார். மேலும், காரைக்குடியில் ரோடு ஷோ மேற்கொண்ட விஜய், தவெக வேட்பாளர் பிரபுவுக்கு வாக்களிக்கும்படி சைகையின் மூலம் தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.

காரைக்குடி பிரச்சாரத்தில் பேசாமல் புறப்பட்டார் விஜய்: தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு
“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம்” - நெல்லையில் விஜய் பேசியது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in