சென்னை: மாற்றுத் திறனாளிகள் மீதான தாக்குதல் மிகத் தீவிரமானது என காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக எழும்பூர் காவல் உதவி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான பா.ஜான்சிராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 1,800 மாற்றுத் திறனாளிகள் கடந்த பிப்.17 அன்று சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் அமைதியாக கூடி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அப்போது அங்கு வந்த எழும்பூர் காவல் உதவி ஆணையர் ஜெகதீசன், காவல் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்
திறனாளிகளிடம் ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதிக்குச் சென்று போராட அறிவுறுத்தினர். அதன்படி அங்கு சென்று அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
ஏப்.21-க்கு தள்ளிவைப்பு
பின்னர் இரவு 8 மணியளவில் திருமங்கலத்தில் உள்ள திருமண மாளிகையில் தங்கவைப்பதாகக் கூறி 20-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏற்றிச்சென்று அடிப்படை வசதிகள் இல்லாத பல்வேறு இடங்களில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர்.
கால்களை இழந்த மாற்றுத் திறனாளியான என்னை போலீஸார் பேருந்தில் தூக்கிப்போட்டு கைகளை முறுக்கினர். மயக்கமுற்ற என்னை மருத்துவமனையில் கூட சேர்க்கவில்லை.
பின்னர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட எங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். எழும்பூர் காவல் உதவி ஆணையர் ஜெகதீசன் மற்றும் காவல் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது எனக் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் இது தொடர்பாக எழும்பூர் காவல் உதவி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.21-க்கு தள்ளிவைத்துள்ளார்.