அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை: உயர் நீதிமன்றம்

நகராட்சி நிர்வாக துறை முறைகேடு விவகாரத்தில் விளக்கம்
அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: “நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டது” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நகராட்சி நிர்வாக துறையில், 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யாத லஞ்ச ஒழிபுத் துறைக்கு எதிராக, இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசும், அமைச்சர் நேரு தரப்பிலும் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நேரு தரப்பில், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கும் முன் தனது தரப்பில் வாதங்களை முன் வைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் விரிவான வாதங்கள் வைக்க வேண்டும் என்பதால், விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதுவரை வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என நேரு தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் தமிழக அரசு மற்றும் நேருவின் மறு ஆய்வு மனுக்களையும், இன்பதுரையின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஜூன் 4 வது வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை: உயர் நீதிமன்றம்
ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவில் இணைந்தது செல்லுமா? - அரசியலமைப்பு நிபுணர் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in