

சென்னை: தமிழகத்தில் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிகாரிகளின் துணையுடன் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி தடுக்க உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமவள ஆணையர் மோகன் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதிகள், தமிழகத்தில் மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘‘மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அத்துமீறி திருடுபவர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணல் அள்ளப்படுவது ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
அதற்கு நீதிபதிகள், நாட்டின் சொத்துகளான மணல் உள்ளிட்ட கனிமவளங்களை கொள்ளையடிக்கும் நபர்களுக்கு வெறும் அபராதம் விதித்தால் மட்டும் போதாது. அவர்கள் மீது குற்றவியல் ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிகாரிகளின் துணையுடன் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதால் குற்றச் சம்பவங்களை குறைக்க முடியவில்லை. கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டால் நமது வருங்கால சந்ததிகளுக்குத்தான் பேராபத்து.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் மணல் கொள்ளையை தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமவள ஆணையரும் தனியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.