‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் இப்படி ஓர் இடியாப்பச் சிக்கல்!

வழிகாட்டு நெறிமுறையில் மாற்றம் செய்யப்படுமா?
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் இப்படி ஓர் இடியாப்பச் சிக்கல்!
Updated on: 
3 min read

காரைக்கால்: தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், அருகில் உள்ள யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இறங்கினாலோ, ஏறினாலோ கட்டணம் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறையில் மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை போக்குவரத்து துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், தமிழகத்தில் இருந்து அருகில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு செல்லும் சாதாரணப் பேருந்துகளில், மகளிர் ஏறும் இடமும், இறங்கும் இடமும் தமிழகத்துக்குள் இருந்தால் மட்டுமே பூஜ்ஜியம் பயணச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.

ஏறும் இடம் அல்லது இறங்கும் இடம் அண்டை மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இருந்தால் நடைமுறையில் உள்ள பயணச்சீட்டு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாநில எல்லையோர பயணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தி யங்கள் புவியியல் ரீதியாக தமிழகத்துக்கு உட்பட்ட பகுதிகளாக உள்ளன. இந்நிலையில் இந்த பகுதிகள் வழியாக வெற்றிப் பயணம் திட்ட பேருந்துகள் இயக்கப்படும்போது, அதில் கட்டணமின்றி பயணிப்பது தொடர்பாக குழப்பங்கள் ஏற்படும் என்கின்றனர். உதாரணமாக, மயிலாடுதுறை மாவட்டப் பகுதியில் இருந்து நாகைக்கு செல்லும் அரசுப் பேருந்து காரைக்கால் பிராந்தியம் வழியாக செல்கிறது.

இந்தப் பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டப் பகுதியில் இருந்து காரைக்கால் பிராந்தியத்தை கடந்து, நாகை பகுதிக்குச் செல்லும் பயணிக்கு கட்டணம் கிடையாது. ஆனால், அதே பேருந்தில் ஒரு பயணி வழியில் காரைக்கால் பிராந்தியத்துக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு இடத்தில் இறங்கினால் கட்டணம் செலுத்த வேண்டும்.

அப்படியெனில் அந்தப் பயணி நாகைக்கு செல்வதாகக் கூறி பூஜ்ஜிய டிக்கெட் எடுத்துக்கொண்டு, இடையில் காரைக்காலுக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு பகுதியில் இறங்கினால், நடத்துநர் அவரை தடுக்க முடியுமா? அல்லது அந்த நேரத்தில் கட்டண டிக்கெட் எடுக்குமாறு பயணியிடம் வலியுறுத்த முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. மேலும், இதனால் பயணி- நடத்துநர் இடையே வாக்குவாதம், பிரச்சினைகள் எழலாம் என பொதுக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது,"அண்டை மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கோ, அதன் வழியாகவோ செல்லும் பேருந்துகளில், தமிழக பகுதிகளில் பயணிக்கும் தொலைவுக்கு பூஜ்ஜியம் பயணச் சீட்டும். அண்டை மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் பயணிக்கும் தொலைவுக்கு ஏற்ப கட்டண பயணச்சீட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, மயிலாடுதுறை பகுதியில் இருந்து காரைக்கால் பகுதிக்கு பயணிக்கும் ஒரு பெண் பயணிக்கு, மயிலாடு துறை பகுதியில் இருந்து மாநிலத்தின் எல்லை வரை பூஜ்ஜிய பயணச் சீட்டு, எல்லை பகுதியை தாண்டி காரைக்கால் பகுதியில் இறங்கும் இடம் வரையிலான தொலைவுக்கு கட்டண பயணச்சீட்டு என 2 பயணச் சீட்டு வழங்க வேண்டும். இந்த விதிமுறை தேவையற்ற குழப்பத்தையும், பயணி மற்றும் நடத்துநர் இடையே பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்" என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "கட்டிடத் தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்று வோர், மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் என தமிழக எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் தினமும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். எனவே, குறைந்தபட்சம் தமிழகப் பகுதிகளில் ஏறி புதுச்சேரி பகுதிகளில் இறங்குவதற்கு மட்டுமாவது விலக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

தடுமாறும் தனியார் பேருந்துகள் ஓட்டுநர் வெளியிட்ட வேதனை வீடியோ:

தவெக அரசின் விரிவு படுத்தப்பட்ட வெற்றிப் பயணம் திட்டத்தால், தனியார் பேருந்துகளில் வருமானம் மிகவும் குறைந்து போய்விட்டிதாகவும், இதனால், குடும்பத்தை நடத்த முடியாமல் தவிப்பதாகவும் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வெளியிட்ட வேதனை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நகரப் பேருந்துகள் மற்றும் சாதாரண புறநகர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் சென்னையில் அண்மையில் தொடங்கி வைத்தார். தவெக அரசின் இந்தத் திட்டத்துக்கு தனியார் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>தனியார் பேருந்தில் இருக்கைகள் காலியாக கிடப்பதை காட்டும் ஓட்டுநர் கீர்த்திவாசன்.</p></div>

தனியார் பேருந்தில் இருக்கைகள் காலியாக கிடப்பதை காட்டும் ஓட்டுநர் கீர்த்திவாசன்.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்தத் திட்டத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாகவும், என்ன செய்வது என்று புரியாமல் மன உளைச்சலில் இருப்பதாகவும் நாகையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் கீர்த்திவாசன் என்பவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைௗதங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், மயிலாடுதுறையிலிருந்து நாகை வரை வந்த தங்களுடைய பேருந்தில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே பயணிகள் ஏறியதாகவும், அதிலும் ஒரு பெண் கூட வரவில்லை என்றும் கூறும் அவர், நாகையிலிருந்து வேளாங்கண்ணி புறப்படும் மற்றொரு தனியார் பேருந்தில் இருக்கை முழுவதும் காலியாக இருப்பதையும் காட்டி, இப்படி இருந்தால் எப்படி நாங்கள் குடும்பத்தை நடத்த முடியும்? பேருந்து உரிமையாளர்களுக்கும் பெருத்த நஷ்டம், எங்களுக்கும் வருவாய் இழப்பு என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் இப்படி ஓர் இடியாப்பச் சிக்கல்!
ஓசூர் பட்டாசுக் கடைகளில் தானியங்கி தீயணைப்பு கருவிகள் - செயல்படுவது எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in