

மதுரை: “திரையில் ஹீரோவான முதல்வர் விஜய் தரையில் ஜீரோவானார். அவரது ரீல்ஸ் அறுந்து போய்விட்டது” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் அவர் கூறியதாவது: அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த பச்சை துரோகத்தால் இரு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. தமிழக வாக்காளர்களை விஜய் குறைத்து மதிப்பிட்டாரோ என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்பது வலிமையானது.
கடந்த தேர்தலில் அதிர்ஷ்டத்தால் கிடைத்த அதிகாரத்தை ஆணவத்தால் அடுத்த கட்சியை அழித்துவிட்டு இனி தமிழ்நாட்டில் தவெக மட்டும் இருக்கும் என்ற ஆணவத்தில் முதல்வர் பேசுகிறார். தற்போது அவரது ஆளுமை கேள்விக்குறியாகிவிட்டது.
திரையில் ஹீரோவாக வலம் வந்த முதல்வர் விஜய், தற்போது தரையில் ஜீரோவாக தடுமாறிக் கொண்டிருக்கிறார். தவெக வேட்பாளர்கள், அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வாக்காளர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றனர். அதிமுகவில் ராஜினாமா செய்தவர்களுக்கு தவெகவில் அடைக்கலம் கொடுத்து போட்டியிட வாய்ப்பளிப்பது என்பது எந்தவித தர்மத்தின் நியாயம்.
தவெகவை நம்பி தோற்றுப் போனவர்கள் இப்போது எங்கே போனார்கள். விஜய்யை நம்பி அவர்கள் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறார்களே? அவர்களுக்கு என்ன பதில் கூறுவார்.
‘படுத்துக்கொண்டே ஜெயிப்போம்’, ‘விஜய்யின் முகத்தைக் காட்டினால் 30 லட்சம் வாக்குகள் விழும்’. ‘விஜய் தான் எம்ஜிஆர்’ என, கப்சா விட்டுக் கொண்டிருந்த விஜய்யின் படம் தமிழக வாக்காளர்களிடம் தற்போது எடுபடவில்லை. விஜய்யின் ரீல்ஸ் தற்போது அறுந்துபோய்விட்டது.
தோல்வி பயத்தால் முதல்வர் விஜய் மதுராந்தகத்தில் 39 ஊர்கள் வழியாக ரோடு ஷோ சென்றுள்ளார். ஆட்களே இல்லாத இடங்களில் பல கிலோ மீட்டர் தடுப்பு அமைத்தனர். இது அப்பகுதி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளை தடுப்பு அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர்.
‘ஆசை அறுபது நாள், மோகம் 30 நாள்’ என்ற வகையில் விஜய்யின் ராஜா வேஷம், தளபதி வேஷம் கலைந்து போச்சு என மக்கள் உரத்த குரலில் கண்டனத்தை தெரிவிகின்றனர். இனிமேல் மக்களை மட்டுமல்ல, யாரையும் கவர்ச்சியால் கவர முடியும் என்ற முதல்வருக்கு, தலையில் இடி விழுந்தது போல தவெக வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் கவிழ்ந்துவிடப் போகின்றனர் என்ற உளவுத்துறையின் அறிக்கை இன்றைக்கு விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது. இவ்வாறு கூறினார்.