

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து லட்சக்கணக்கானோர் சென்னை திரும்பியதால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து 18 லட்சம் பேர் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு நேற்று முன்தினம் முதல் ஏராளமானோர் திரும்பத் தொடங்கினர். நேற்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னைக்குத் திரும்பத் தொடங்கினர். இதனால், இந்த மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் ஏற்கெனவே நிரம்பியிருந்தது. சிறப்பு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்தது.
இதையொட்டி முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய திட்டமிட்டு அரசு, தனியார் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதற்காக போக்குவரத்து துறை சார்பில் நேற்று மட்டும் 3,100 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. மேலும் கார்கள் உள்ளிட்ட தனி வாகனங்கள் மூலமாகவும் பலர் சென்னைக்கு திரும்பினர்.
இந்நிலையில், தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுத்ததால், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதவிர சிங்கப்பெருமாள்கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் ஓஎம்ஆர், ஈசிஆரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இன்று காலை வரை செங்கல்பட்டு மாவட்ட மற்றும் சென்னை மாநகர போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
கட்டணம் உயர்வு: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் மக்களும் வேறுவழியின்றி இந்த கட்டணத்தை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கோயம்புத்தூரில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இருக்கை வசதி மட்டும் கொண்ட பேருந்துகள் குறைந்தபட்சம் ரூ.2000 முதல் ரூ.4,000 வரை விற்கப்படுகின்றன. படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளில் ரூ.3500-ல் இருந்து ரூ.7500-க்கும் டிக்கெட் விற்கபட்டது. அதேபோல, மதுரையிலிருந்து சென்னைக்கு ரூ.2,500 முதல் ரூ.6,000 வரையும் திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ.1,800 முதல் ரூ.3,500 வரையும் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.