

கோப்புப்படம்
சென்னை: குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். அப்போது முப்படை வீரர்கள், தமிழக போலீஸாரின் அணிவகுப்பு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்தி உலா போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று (திங்கள்கிழமை), 21-ம் தேதி (புதன்கிழமை) மற்றும் 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. எனவே இந்த 3 நாட்கள் மற்றும் குடியரசு தினம் ஆகிய 4 நாட்கள் காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை வழியாகவும், மாநகர பேருந்து உட்பட பிற வாகனங்கள் காந்தி சிலை சந்திப்பிலிருந்து ராதா கிருஷ்ணன் சாலை வழியாகவும், மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாகவும் செல்லலாம்.
டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கியும், டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கியும், காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கியும் திருப்பிவிடப்படும்.
வாலாஜாசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.
அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.
அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.