புதுச்சேரி நகரப் பகுதிகளுக்குள் கனரக வாகனங்கள் இயக்க தடை

புதுச்சேரி நகரப் பகுதிகளுக்குள் கனரக வாகனங்கள் இயக்க தடை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதிகளில் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் இயக்க தடை விதித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி. திவ்யா அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து போலீஸார் மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு போக்குவரத்து சீனியர் எஸ்.பி. திவ்யா தலைமை தாங்கினார்.

எஸ்.பி. பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிப்பர், லாரி, மினி லாரி உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற கனரக வாகன உரிமையாளர்கள் தங்களின் பல்வேறு குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

அதனை கேட்ட சீனியர் எஸ்.பி. திவ்யா பேசும்போது, “புதுச்சேரியில் தற்போது சாலை விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து மிகுதியான நேரங்களில் அதிவேகமாக இயக்கப்படும் கனரக வாகனங்களால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கி இறப்பது நடக்கிறது.

ஆகவே, பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ள இடங்களில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மணல், ஜல்லி உள்ளிட்டவைகளை ஏற்றி செல்லும்போது அவற்றை மூடி எடுத்துச் செல்ல வேண்டும்.

லாரிகளில் ஓட்டுநர்களுடன் கிளீனர்களை பணியமர்த்த வேண்டும். ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்க வேண்டும். மீறினால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து போலீஸாரின் திடீர் ஆய்வின்போது, அதிவேகமாக இயக்கப்படும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு மற்றும் அபராதம் விதிக்கப்படும். நகரப்பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, தினமும் காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் டிப்பர், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. அதனை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

புதுச்சேரி நகரப் பகுதிகளுக்குள் கனரக வாகனங்கள் இயக்க தடை
புதுச்சேரி நல்லவாட்டில் நகை திருடியவர் கைது - 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் பறிமுதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in