

திருச்சி: சென்னை அருகே நீடிக்கும் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (டிச.3) வரை கனமழை தொடரும் என்றும், தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வ குமார் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு கிழக்கே நேற்று மாலை வரை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச.2) சென்னைக்கு மிக அருகில் வந்து தீவிர தாழ்வு பகுதியாகவும், பிறகு தாழ்வு பகுதியாகவும் செயலிழக்கும். நாளை (டிச.3) சென்னைக்கு தெற்கு பகுதியில் உள்ள மாவட்டங்கள் ஊடாக தெற்கு தென் மேற்கு திசையில் நகரும்.
அரபிக்கடல் நோக்கி நகரும்: டிச.4, டிச.5 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து, சாதாரண தாழ்வு பகுதியாகவோ அல்லது ஒரு காற்று சுழற்சியாக செயலிழந்து டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் ஊடாக அரபிக்கடல் நோக்கி நகரும்.
மேற்கண்ட நிகழ்வு நகர்வுகள் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அவ்வப்போது சில மணி நேரங்கள் கனமழையாகவும், சற்று கனமழையாகவும் தொடரும்.
ந.செல்வகுமார்
செங்கல்பட்டு மாவட்டத்தை விட சென்னைக்கு சற்று கூடுதலாகவும், அதைவிட திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாகவும் மழை இருக்கும். நாளை (டிச.3) வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை இருக்கும்.
இந்த நிகழ்வு நாளை செயலிழந்து தென் மேற்காக நகரும் போது வட உள்மாவட்டங்களிலும் மிதமானது முதல் சற்று கனமழை பெய்யும். இதனால் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தெற்கு தென்மேற்கு நோக்கி நகரும்போது டிச.4, 5 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக நல்ல மழை இருக்கும்.
புதிய காற்று சுழற்சி: டிச. 6, 7 ஆகிய தேதிகளில் புதிய காற்று சுழற்சி வட இலங்கைக்கு வருவதால் டிச.6, 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழை பொழிவை தீவிரப்படுத்தும். இது இலங்கைக்கு மீண்டும் அச்சுறுத்தலை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.