

மதுரை: நடப்பு ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருநாளான டிச. 3-ல் (நாளை) திருப்பரங்குன்றத்தில் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே மோட்ச தீபம் ஏற்றும் இடத்துக்கு பதிலாக மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிகுமார், பரமசிவம், கார்த்திகேயன், அரசபாண்டி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கனக வேல்பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்து மக்கள்கட்சி மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் சார்பில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும், அனைத்து சாதி அர்ச்சகர்கள் சங்கம் சார்பிலும், சீனி அகமத் ஜலால் சார்பிலும் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எதிராகவும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரவில்லை. மலையில் உள்ள தீபத் தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள். மலையில் இரு உச்சிகள் உள்ளன.உயரமான உச்சியில் தர்காவும், உயரம் குறைந்த உச்சியில் தீபத்தூணும் உள்ளது.
தீபத்தூண் முஸ்லிம்களுக்கு உரிமைப்பட்ட பகுதியில் இல்லை. சிவில் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தர்காவுக்கு உரிமைப்படாத பகுதியில் இருக்கும் தீபத்தூண் கோயிலுக்குச் சொந்த மானது என நீதிமன்றம் முடிவு செய்கிறது. அது தீபம் ஏற்றும் வடிவமைப்புடன் உள்ளது. அது கொடி மரம் அல்ல. தர்காவுக்கு தனி கொடி மரம் உள்ளது.
சமீபத்திய நிகழ்வுகள் தீபத்தூண் கோயில் சொத்து என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் விளக்கு ஏற்ற முயற்சிக்கக் கூடும் என நினைத்து கோயில் நிர்வாகம் மூடி வைத்துள்ளது. தீபத்தூணும் அதை ஒட்டிய பகுதியும் தர்காவுக்கு சொந்தமானதாக இருந்தால் தீபத்தூண் மூடியதை பார்த்துக்கொண்டு தர்கா நிர்வாகம் அமைதியாக இருந்திருக்காது. தர்காவின் கோரிக்கை உண்மையல்ல என்பதற்கு இது ஒன்றே போதுமானது.
மனுதாரர்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதை நிறுத்தக் கோரவில்லை. தீபத்தூணிலும் விளக்கை ஏற்ற வேண்டும் என்கின்றனர். நூறு ஆண்டுகளாக தீபத்தூணில் விளக்கு ஏற்றப்படவில்லை. மலை உச்சியில் விளக்கு ஏற்றுவது தமிழ் மரபு.இந்த பாரம்பரியத்தை கோயில் நிர்வாகம் மீண்டும் தொடங்க வேண்டும் என மனுதாரர்கள் கோருவது நியாயமானது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்றுவதன் மூலம், தர்கா நிர்வாகம் எந்த வகையில் பாதிக்கப்படும என்பதை நிரூபிக்கவில்லை. அவர்களின் உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. எனவே, இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம், மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் ஏற்றப்பட வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்வது காவல் துறையின் கடமை. இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.