புதுச்சேரியில் கனமழை: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

புதுச்சேரியில் கனமழை: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி

படங்கள்: எம்.சாம்ராஜ்

Updated on: 
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த சில தினங்களாக புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிவருகிறது.

இது நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ‘அர்னாப்’ புயலாக மாறி ஆந்திராவின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 9.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் மழையானது சுமார் 11 மணி வரை நீடித்தது.

சுமார் 3 மணி நேரங்களில் 10 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி தீர்த்ததால், பெரிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால், வெள்ளவாரி வாய்க்கால் உள்ளிட்ட பிரதான வாய்க்கால்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதேபோல், இந்திரா காந்தி சிக்னல், ராஜீவ் காந்தி சிக்னல், சிவாஜி சிலை சிக்னல் உள்ளிட்ட முக்கிய சிக்னல்களிலும், 45 அடி சாலை, முருங்கப்பாக்கம் கடலூர் - புதுச்சேரி சாலை போன்ற சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதிதாக போடப்பட்ட விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலையிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகளும் வெளியே செல்ல முடியாமல் விடுதி மற்றும் ஓட்டல்களில் முடங்கினர். மேலும், சன்டே மார்க்கெட் வியாபாரிகளும் இன்று கடைபோட முடியாமல் தவித்தனர், இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், புதுச்சேரி மீனவர்கள் வரும் 27-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துணை நிலை ஆளுநர் ஆய்வு:

கனமழை பெய்து வருவதை ஒட்டி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு நீரோட்டத்தை பார்வையிட்டார். சுண்ணாம்பாறு மேம்பாலத்தின் நீர்வடியும் பாதையில் ஏற்பட்டிருந்த அடைப்பை அங்கிருந்த ஒருவரைக் கொண்டு சரி செய்து, தேங்கியிருந்த மழைநீரை வடிய ஏற்பாடு செய்தார்.

அமைச்சர் ஆய்வு: புதுச்சேரியில் பெய்யும் கனமழை பாதிப்புகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

முதலில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மழையின் தன்மை குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து சிவாஜி சிலை சந்திப்பு, கிருஷ்ணா நகர், எழில் நகர் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்து, பொதுப்பணித்துறை மூலம் மின் மோட்டார்கள் கொண்டு மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டார்.

அனைத்து வாய்க்கால்களிலும் மழை நீர் சீராக செல்கிறதா என்றும், தாழ்வான இடங்களில் மழை நீர் நிரந்தரமாக தேங்காமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

படகு குழாமில் படகுகள் நிறுத்தம்:

புதுச்சேரியில் பெய்துவரும் கனமழையால் சுண்ணாம்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நோணாங்குப்பம் படகு குழாம் பிளாட்ஃபார்ம் வரை தண்ணீர் ஓடியதால் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

படகுகளும் பாதுகாப்பாக கரைகளில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் படகு இல்லம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆற்றில் தண்ணீர் குறைந்து இயல்பு நிலை திரும்பியதும் படகு சவாரி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் கனமழை: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி
“ரீல்ஸ் ஆட்சிக்கு வாக்களித்தவர்களே புலம்புகிறார்கள்” - தவெக அரசை சாடிய மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in