

சென்னை: வங்கக் கடலில் நாளை (அக்.23) உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், நாளை (23-ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இது வலுவடைந்து மேற்கு, தென் மேற்கு திசையில் நகரும். இப்போதுள்ள தரவுகளின்படி, தமிழகத்துக்கு இந்த புயலால் பாதிப்பு இல்லை.
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும். மேலும் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
நாளை (23-ம் தேதி) கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேலும் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, சென்னை எம்ஜிஆர் நகரில் 15 செ.மீ. வடபழனியில் 14 செ.மீ. சைதாப்பேட்டை, சென்னை விமான நிலையம், ஆலந்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் தலா 13 செ.மீ. சென்னை மீனம்பாக்கம், டிஜிபி அலுவலகம், மடிப்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
எல் நினோ தாக்கத்தால் வடகிழக்கு பருவமழை குறைய வாய்ப்பில்லை. அதிகமாகவே பெய்யும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 44 செ.மீ. மழை கிடைக்கும். இந்த ஆண்டு அக்.21-ம் தேதி (நேற்று) வரை 11 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் வழக்கமாக 10 செ.மீ. மழை கிடைக்கும். தற்போது ஒரு சதவீதம் அதிகமாக 11 சதவீத மழை பெய்துள்ளது. இவ்வாறு வி.ஆர். துரை கூறினார்.
‘டெல்டாவில் பயிர் சேதம் இல்லை’
தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பி.சந்திரமோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் பெய்த கனமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டு விட்டது. கனமழையால் விழும் மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. கனமழையால் வீடுகள் சேதம் அடைந்ததாக இதுவரை தகவல் வரவில்லை. கடந்த 48 மணி நேரத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் பேசியுள்ளோம். தற்போதும் பேசி வருகிறோம்.
அனைவரும் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கையுடன் தயார் நிலையில் உள்ளனர். கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கும் மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் இதுவரை பயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மழை மானியில் முரண்பட்ட தகவல்
சென்னை மாநகரில் கடந்த அக்.17-ம் தேதி இரவு அதி கனமழை பெய்தது. அதிகபட்சமாகப் பாரிமுனையில் 36 செ.மீ. மழை பதி வானது. மாநகரின் பல சாலைகள் வெள்ளக்காடாயின. அன்று மாலை 6.30 முதல் 7.30 மணிக்குள்ளாக சுமார் 10 செ.மீ. மழை பதிவானதால், மேகவெடிப்பாக இருக்கும் என்று செய்திகள் பரவின. ஆனால், மேகவெடிப்பால் அதிக மழை பெய்யவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்தது.
அன்றைய தினம், மாநகராட்சி சார்பில் பாரிமுனையில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி மழை மானியில் 36 செ.மீ. மழை பதிவானது. அதன் அருகில் சென்னை சென்ட்ரலில் பகுதியில் உள்ள மாநகராட்சி மழை மானியில் 27 செ.மீ. மழை பதிவானது. சென்ட்ரலுக்கு மிக அருகில் உள்ள புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மழை மானியில் 14 செ.மீ. மழை மட்டுமே பதிவானது.
பாரிமுனையை விட, சென்ட்ரலில் 9 செ.மீ. சென்ட்ரலுடன் புதுப்பேட்டையை ஒப்பிடும்போது 13 செ.மீ. குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் மாநகராட்சி மழை மானிகளின் தரவுகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், மீனம்பாக்கத்தில் மாநகராட்சி மழை மானியில் 28 செ.மீ. வானிலை ஆய்வு மைய மழை மானியில் 15 செ.மீ. பதிவாகி உள்ளது. இதில் மாநகராட்சி மற்றும் வானிலை மைய மழை மானிகளுக்கு இடையே முரணான தகவல் பதிவாகியுள்ளது.
பாரிமுனையில் 18-ம் தேதி காலை வரை 36 செ.மீ. மழை பெய்ததால், அடுத்த நாளும் அதிகனமழை வாய்ப்பு என அறிவிக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இதுபோன்று வித்தியாசம் வர வாய்ப்பில்லை. இதுதொடர்பாக அனைத்து மழை மானிகளையும் ஆய்வு செய்யுமாறு, வானிலை மைய அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவரவர் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.