

புதுடெல்லி: சிஜேபி நிர்வாகிகளான அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம். இதையடுத்து அவர்கள் இருவரும் 7 நாள் காவலுக்கு பிறகு திஹார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
டெல்லியில் போராட்டங்களுக்கான இடப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதிக்குள் கடந்த அக்டோபர் 13 அன்று நுழைந்து போராட்டம் நடத்தியதாக சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் ஐந்து நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் அண்மையில் அவர்களது காவல் மேலும் நீட்டிக்கப்பட்டது. இந்த உத்தரவை சிறப்பு நீதிமன்ற நடுவர் பிறப்பித்தார்.
இந்த சூழலில் அவர்களது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை டெல்லி காவல்துறையினர் நாடியிருந்தனர். அதற்கான காரணமாக சட்டம் ஒழுங்கு போலீஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதே நேரத்தில் அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோரை தொடர்ந்து காவலில் வைக்க முடியாது என சிஜேபி தரப்பு நீதிமன்றத்தில் வாதாடியது.
இந்த சூழலில் தனிநபர் பிணை மற்றும் அமைதிக்கான பிணை பத்திரங்கள் அவர்கள் இருவர் சார்பிலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி போராட்டங்களுக்கான இடப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க மாட்டோம், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் நீதிமன்றத்துக்கு உறுதியளித்தனர்.
இதன் அடிப்படையில் அவர்கள் இருவருக்குக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சிஜேபி சட்ட விவகார பிரிவின் தலைவர் ரத்னா சிங் வரவேற்றுள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தலைநகர் டெல்லியில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி, சிஜேபி உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. இந்த சூழலில் தடையை மீறி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காரணத்துக்காக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே (ஒருமுறையும்), சிஜேபி நிர்வாகிகளான அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோர் (இருமுறையும்) கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“வரும் தீபாவளி வரை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தப்போவது இல்லை. அதனால் எந்தவித போராட்டத்தையும் அதுவரை முன்னெடுக்கும் யோசனை இல்லை” என்று அபிஜித் திப்கே செவ்வாய்க்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.