வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, தி.மலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, தி.மலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் லட்சத்தீவு வரை மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் குமரிக் கடல் வழியாக சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.

மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இவை காரணமாக தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், ஜூன் 1-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 2 முதல் ஜூன் 5-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (மே 31) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 1, 2 தேதிகளில் மேற்கூறிய மாவட்டங்களில் (விழுப்புரம் நீங்கலாக) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் ஜூன் 1-ம் தேதியும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 85 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 8 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, கோவை மாவட்டம் தோலம்பாளையத்தில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, தி.மலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
கேரளாவில் சிக்கிய ஜெலட்டின் வெடிபொருள்: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in