

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை சுமார் 900 மீட்டர் உயரத்தில் தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (6-ம் தேதி) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் 7-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 8-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
9, 10 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்களிலும், 11-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை அதிகமாக இருக்கக் கூடும். தமிழகத்தில் இன்று விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின் படி அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்தில் 7 செமீ, வேலூர் மாவட்டம் பொன்னை அணை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, நீலகிரி மாவட்டம், பார்வூட், கடலூர் மாவட்டம் தொழுதூரில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.