

சென்னை: மாநகர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை, புறநகரில் நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில் நிலவியது. இதனால் பொதுமக்கள் முக்கியப் பணிகளை முடிக்க வெளியில் செல்ல முடியாமல் மாலை நேரத்தில் வெளியில் சென்றனர்.
பேருந்து மற்றும் மின்சார ரயிலுக்காக காத்திருந்த பொதுமக்கள் கடும் புழுக்கத்தால் அவதிக்குள்ளாகினர். புறநகர் ரயில்களில் அனல் காற்று வீசியது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் அதிகாலை வேலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கனமழையால், கோயம்பேடு சந்தைக்கு நுழையும் பகுதிகளில் மழைநீர் தேங்கியதாலும், சந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
கொட்டித் தீர்த்த கனமழையால் மறைந்த பாக்யராஜ் இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. திருவான்மியூர், காமராஜர் நகர் கலாஷேத்ரா சாலை, சேத்துப்பட்டு சுரங்கப்பாலம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை ஏரியில் 8 செமீ, சென்னை கொரட்டூர், அயப்பாக்கம், வளசரவாக்கம், நெற்குன்றம், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை, புழலில் தலா 6 செமீ, மழை பதிவாகியுள்ளது.