வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

மழை | கோப்புப் படம்
மழை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஏப்.30) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தென் உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஏப்.29) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் ஏப்.30, மே 1, 2 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.30-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மே 1-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மே 2-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மே 3-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், மே 4-ம் தேதி உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் மே 3-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (ஏப்.29, 30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசவுகரியம் ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மழை | கோப்புப் படம்
ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in