அடுத்த 7 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 7 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on: 
2 min read

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், அங்கிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதையும் நீடிக்கிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இவற்றுடன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு, சேலம் மற்றும் பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (அக்டோபர் 20) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கும். இதற்கிடையே, அக்டோபர் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளதுடன், கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் அதிகபட்சமாக 184.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
‘ரயில்களில் மொபைல்போன் ஸ்பீக்கரில் பாடல் கேட்டால் இனி அபராதத்துடன் தண்டனை’ - தெற்கு ரயில்வே

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in