

தஞ்சாவூர் பெரிய கோயில் தெரியாத அளவுக்கு நேற்று காணப்பட்ட மூடுபனி.
நாகப்பட்டினம்: கடந்த சில நாட்களாக வட கிழக்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் நேற்று காலை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடும் மூடுபனி காணப்பட்டது. தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என அனைத்து நகரங்களிலும் கட்டிடங்கள் தெரியாத வகையிலும், தொலைவில் வருவதை பார்க்க முடியாத அளவுக்கு மூடுபனி காணப்பட்டது.
இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டுகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். பலர் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு வந்தாலும் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. ஆனாலும் பனிப்பொழிவு என்பது இல்லை. வெறும் மூடுபனியாகவே காணப்பட்டது. அவ்வளவாக குளிரும் இல்லை.
பொதுவாக மார்கழி மாதத்தில்தான் இந்த அளவுக்கு பனிமூட்டம் இருக்கும் என்ற நிலையில் தற்போது மழைக்காலத்தில் இப்படி திடீரென பனிமூட்டத்துக்கான காரணம் என்ன? பனி காரணமாக இனி மழை பெய்யாதோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மூடுபனிக்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் ஈரப்பதம் வளிமண்டலத்தில் தற்போதும் இருப்பதாலும், அத்துடன் வடக்கு காற்று நுழைவதாலும் இந்த பனிமூட்டம் காணப்படுகிறது.
இது அர்னாப் புயல் கரையைக் கடந்த ஓரிரு நாட்கள் வரை காலை வேளையில் மட்டும் இருக்கும். ஆனால், பனிப்பொழிவு இருக்காது. இதனால் மழை இருக்காதோ என்று விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை 2-ம் சுற்று தொடங்கும். அதிலும் நல்ல மழை தமிழக பகுதிகளுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.