

புதுடெல்லி: நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்துள்ள 'ராமாயணா’ படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான 'மங்கள் ரங்' என்ற பாடல் கடந்த அக்டோபர் 25 அன்று வெளியானது.
அரிஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல், ராமன் மற்றும் சீதையின் திருமணப் பந்தத்தையும், அயோத்திக்கு சீதையின் வருகையையும் கொண்டாடும் வகையில் குமார் விஷ்வாஸின் வரிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் கார்த்திக் நேத்தா வரிகளில் சைந்தவி, அபய் ஜோத்புர்கர் பாடியுள்ளனர்.
இப்பாடல் வெளியானதைத் தொடர்ந்து, இந்து புராண அடிப்படையிலான ஒரு திரைப்படத்திற்கு சுஃபி மற்றும் கவாலி பாணியிலான இசை அமைக்கப்பட்டிருப்பது பொருத்தமாக இல்லை எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
"வால்மீகியின் ராமாயணத்தில் சூஃபி கவாலி இசையைப் புகுத்துவது பாலிவுட்டின் அறியாமையைக் காட்டுகிறது. கலாச்சாரப் பின்னணியோ அல்லது ஆராய்ச்சியோ இல்லாமல் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் ராமாயணத்தை ஒரு சாதாரண காதல் திரைப்படத்தைப் போல நடத்துவதை நிறுத்த வேண்டும்" என்று இணையவாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் சிலர், ஏ.ஆர். ரஹ்மான் ஏற்கனவே தனது பழைய வெற்றிப் பாடல்களான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தின் 'என்ன சொல்லப் போகிறாய்' மற்றும் 'ராக்ஸ்டார்' படத்தின் 'குன் ஃபாயா குன்' ஆகிய பாடல்களின் இசையை மறுசுழற்சி செய்து இப்பாடலை உருவாக்கியுள்ளதாக விமர்சித்துள்ளனர்.
இது போன்ற கதைகளுக்கு இந்திய பாரம்பரியம் சார்ந்த இசை மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், சுஃபி பாணி இசையைப் புகுத்தியது தவறான அணுகுமுறை என்றும் பலர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்கள் குறித்து விளக்கமளித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் "நாங்கள் ஒரு பாடலை உருவாக்கும் போது பல்வேறு கட்ட ஆய்வுகள், வடிகட்டுதல்கள் மற்றும் மாற்றங்களை மேற்கொள்கிறோம். அதையெல்லாம் தாண்டிப் பாடல் வெளிவந்த பிறகு எழும் விமர்சனங்களைக் கவனிப்பதற்கு எங்களிடம் ஆற்றல் இருப்பதில்லை.
பலமுறை சோதித்துப் பார்த்த பின்னரே பாடலை வெளியிடுகிறோம். என் மகன் கூட இணையத்தில் வெளியாகும் விமர்சனங்களைப் பற்றி என்னிடம் கூறுவான். ஆனால் நான் என் பணியை மிகவும் உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் செய்துள்ளேன்; மக்கள் இந்தப் பாடலைக் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.