

சென்னை: தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பலவீனமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை வேலூர், மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். 17-ம் தேதி முதல் பருவமழை படிப்படியாக முன்னேற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளில் தற்போது, தென்மேற்கு பருவமழை பலவீனமாக உள்ளது.
இதற்கு, பூமத்திய ரேகையை தாண்டி வீசும் தென்மேற்கு காற்று பலவீனமடைந்திருப்பதால், மேற்கு அரபிக்கடல் பகுதியில் வழக்கத்தைவிட குறைந்த வலிமையுடன் கீழ்மட்ட ஜெட் காற்று காணப்படுவதும், அதனுடன் வளர்ச்சி அடைந்துவரும் எல் நினோ நிலையும் இணைந்து முக்கிய காரணங்களாக உள்ளன.
இதன் விளைவாக, அரபிக்கடலிலிருந்து ஈரப்பதம் வருவது குறைந்துள்ளதால், கேரளம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழைப்பொழிவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
மேலும், பலவீனமான பருவமழை சுழற்சியுடன், எல் நினோவால் ஏற்படும் பரந்த அளவிலான கீழ்நோக்கி வீசும் காற்று மேகங்கள் உருவாவதைத் தடுத்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மேகமற்ற வானம் நிலவி, சூரியக் கதிர்வீச்சு அதிகளவில் தரையை அடைவதால், வழக்கத்தைவிட அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்து பதிவாகி வருகிறது.
இதனையடுத்து, உள் தமிழகத்தின் சில பகுதிகள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
காற்று பகுப்பாய்வின்படி, தற்போது பலவீனமாக உள்ள கீழ்மட்ட ஜெட் காற்று, நாளை (ஜூலை 17) முதல் படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, பூமத்திய ரேகையைத் தாண்டி அரபிக்கடலிலிருந்து ஈரப்பதம் வருவது அதிகரித்து, தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் படிப்படியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, 17-ம் தேதி முதல் கேரளம், கர்நாடகம், தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேகமூட்டம் மற்றும் மழைப்பொழிவு அதிகரிப்பதால், தரையை அடையும் சூரியக் கதிர்வீச்சு குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், உள் தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகளில் தற்போது நிலவி வரும் வெப்ப அலை நிலை வாரத்தின் 2-ம் பாதியில் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும். குறிப்பாக தமிழகத்தில் இன்றும், நாளையும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிபபில் கூறப்பட்டுள்ளது.