

சென்னை: தென்னிந்திய பகுதிகளில் தெனமேற்கு பருவமழை குறைவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று வேலூர், மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். நாளை முதல் பருவமழை படிப்படியாக முன்னேற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் தமிழகத்தின் சில பகுதிகள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்று பகுப்பாய்வின்படி, தற்போது பலவீனமாக உள்ள கீழ்மட்ட ஜெட் காற்று, நாளை (ஜூலை 17) முதல் படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, பூமத்திய ரேகையைத் தாண்டி அரபிக்கடலிலிருந்து ஈரப்பதம் வருவது அதிகரித்து, தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் படிப்படியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, நாளை முதல் கேரளம், கர்நாடகம், தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேகமூட்டம் மற்றும் மழைப்பொழிவு அதிகரிப்பதால், தரையை அடையும் சூரியக் கதிர்வீச்சு குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உள் தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகளில் தற்போது நிலவி வரும் வெப்ப அலை நிலை வாரத்தின் 2-ம் பாதியில் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும். குறிப்பாக தமிழகத்தில் இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இத்தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.