

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) தள்ளிவைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், இணை ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக மனுதாரர்கள் ராம.ரவிக்குமார், பரமசிவம், அரசபாண்டி ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீது தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
தனி நீதிபதியின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குத் தடை விதிக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், காவல் இணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அரசுத் தரப்பில், தனி நீதிபதியின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக மேலும் பலர் நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களையும் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ஏன் இத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு வரும் போதும் ஒவ்வொரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதனால் மேல்முறையீடு மனுக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதிட இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.