

தாம்பரம்: இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐஎம்ஏ) கிளை சார்பில் தாம்பரத்தில் ‘நம்ம ஹெல்த் மெகா எக்ஸ்போ 2026’ என்ற மூன்று நாள் சுகாதாரக் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், 52.8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹெல்த் கொலு’ பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. பல்வேறு மருத்துவத் துறைகள் சார்பில் இலவச மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய மருத்துவச் சங்கத்தின் தாம்பரம் கிளை பொன்விழாவையொட்டி தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, அக்டோபர் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய மருத்துவச் சங்கத்தின் கவுரவ பொதுச்செயலாளர் அபுல் ஹசன் கண்காட்சியை தொடங்கிவைத்தார். இதில் நரம்பியல், இருதயவியல், மகப்பேறியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த 26 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 மருத்துவக் கல்லூரிகள், 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், சுமார் 400 மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நவராத்திரியின் பாரம்பரியத்தையும் மருத்துவ விழிப்புணர்வையும் இணைக்கும் வகையில் 52.8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹெல்த் கொலு’, உலகின் மிக உயரமான கொலுவாக பதிவு செய்யப்படுவதற்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் டி.சரத்குமார், பள்ளி மாணவர்களுக்கான ‘நலமான பள்ளிகள்’ திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து, மனநலம், மாதவிடாய் ஆரோக்கியம், போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்கிறார். பொதுமக்கள் இலவச மருத்துவப் பரிசோதனைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.