

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு, போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது: டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மட்டுமின்றி அதன் புழுக்களையும் கண்டறிந்து அழிக்கும் பணியில், 25,158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல், கொசு ஒழிப்பு பணிகளுடன், காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளிலும், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பு பணி நடந்து வருகிறது.
அதன்படி, 45 சுகாதார மாவட்டங்கள் அடிப்படையில், 12 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓர் ஒருங்கிணைப்பாளர், சராசரியாக மூன்று அல்லது நான்கு சுகாதார மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவ துறையினருடன் இணைந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.