

சென்னை: யூடியூபர் இர்ஃபான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது கர்ப்பிணி மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று, மருத்துவப் பரிசோதனை செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிந்து கொண்டார்.
அதனை, தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு அறிவித்தார். அப்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம், இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இர்ஃபான் மன்னிப்பு கடிதம் வழங்கினார். இதனை ஏற்று கொண்ட அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இர்ஃபான் மீது நடவடிக்கை தேவையில்லை என தெரிவித்தார்.
இதனை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகந்நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், 8 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துரைக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இயக்குநரகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகளிடம் விளக்கமளித்தார்.